Tuesday, April 12, 2022

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள்

 -- முனைவர் க. சுபாஷிணி 

 

அறிமுகம்

கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. அதில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வந்த பௌத்த பிக்குகளும் பௌத்த சமயம் பரப்பும் பணியில் முக்கியப் பணியாற்றியுள்ளார்கள். தமிழ்நாட்டு வணிகர்களின் பங்களிப்பும் இதில் முக்கியமானதாகும்.  சீனா, ஜப்பான் கொரியா, என நீண்ட தூரம் தமிழ் நிலத்திலிருந்து பயணித்திருக்கின்றார்கள்.  இத்தகைய பயணங்கள் கிழக்காசிய நாடுகளிலும் தூரக் கிழக்காசிய நாடுகளிலும் பௌத்தம் ஆழ வேரூன்றி வளர்ச்சி பெற அடித்தளம் அமைத்தது.

ஸ்ரீவிஜயா போன்ற மிகப்பெரிய பேரரசு, மிகப்பெரிய பௌத்த அடிப்படை கொண்ட நாடாக இருந்த இந்தோனீசியா கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் சிறிது சிறிதாக இஸ்லாமிய மதத்தை உள்வாங்கிக்கொண்டு இஸ்லாமிய நாடாக மாறத் தொடங்கியது. மலாயா கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் இதே அரசியல் சமய மாற்றத்தை அடையத் தொடங்கி இவை இரண்டும் இன்று கிழக்காசிய நாடுகளில் இஸ்லாமிய மதத்தை அரசியல் மதமாகக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. ஏனைய கிழக்காசிய,  தூரக்கிழக்காசிய நாடுகள் தொடர்ந்து பௌத்த சமயத்தைத் தங்கள் அரசியல் மதமாகக் கொண்ட நாடுகளாக விளங்கி வருகின்றன.


மலேசியாவின் பல பகுதிகளில் பௌத்த ஆலயங்கள் இருக்கின்றன என்பதை நம்மில் பலரும் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் கெடா மாநிலத்தில் ஏராளமான பௌத்த விகாரைகள் இருக்கின்றன என்பதை எனது இந்தப் பயணத்தில் தான் நான் அறிந்து கொண்டேன். பண்டைய பௌத்த சமய ஆதிக்கத்தின் தொடர்ச்சி முழுமையாக அழிந்து விடாமல் பலபகுதிகளில் அதிலும் குறிப்பான கெடா மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் இன்னமும் உயிர்ப்புடன் செயல்பட்டு வருகின்றன என்பதைக் காணும் போது வியப்பு மேலிடுகிறது.

கெடா மாநிலத்தின் சிக், ஜெனியாங் ஆகிய இரு பகுதிகளில் மட்டுமே உள்ள பௌத்த விகாரைகளுக்குச் சென்று வருவோம் என புறப்பட்டபோது ஆச்சரியப்படத்தக்க வகையில் ஏறக்குறைய 12 பௌத்த விகாரைகளை நான் நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.  பெரும்பாலானவை தாய்லாந்து பௌத்த அடிப்படையில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகளாக அமைந்திருக்கின்றன. 


வாட் காலாய் பௌத்த விகாரை (Wat Kalai):


கெடா மாநிலத்தின் ஜெனியாங் பகுதியில் இருக்கின்றது வாட் காலாய் (Wat Kalai) என்ற பெயர் கொண்ட இந்த பௌத்த விகாரை. செழிப்பான வளமான மலைப் பகுதியில் அடர்ந்த காடுகள் சூழ்ந்த வகையில் அமைந்த பகுதியில் இந்தப் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. சாலையிலிருந்து மிக எளிதாக இந்த விகாரையை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இந்தப் பௌத்த விகாரைக்குப் பின்புறம் காட்டாறு ஒன்று மிக வேகமான நீர் பாய்ச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியும் நம் மனதைக் கவர்கிறது. மிகப்பெரிய வளாகத்தில் பல்வேறு சிறு சிறு சன்னதிகளாக புத்தரின் வடிவங்கள், தாய்லாந்து பௌத்த சின்னங்கள், போதிசத்துவர் சிற்பம், தியான மண்டபம், பிக்குகள் தங்கும் வீடு என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.


இக்கோயிலின் மிகச் சிறப்பான ஒரு சிற்பம் என்றால் அது 21 மீட்டர் உயரம் கொண்ட புத்தரின் சிலை எனலாம். புத்தரின் சிலைக்குக் கீழ் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. அதனுள் சிறுசிறு பெட்டிகள் போல் அமைக்கப்பட்ட அலமாரிக்குள் இறந்த பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களின் சாம்பல் குடுவைகளில் வைக்கப்பட்டு அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன.  இக்கோயில் அமைக்கப்படுவதற்கு முன்பு இருந்த பழைய கட்டுமானத்தில் சிதிலமடைந்த பகுதிகள் சில ஓரிரு இடங்களில் தென்படுகின்றன.

ஒரு பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரது சிலை வைக்கப்பட்டு அதன் பின் பாம்புப் புற்று ஒன்று வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. சீனர்களின் வழிபாட்டில் அமைந்திருக்கக் கூடிய 12 மாதங்களுக்கான 12 விலங்குகளின் சிறிய அளவிலான சிற்பங்கள் வைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றும் இந்த வளாகத்தில் அமைந்திருக்கின்றது. தாமரைக்குளம் மீன் குளம் ஆகியவையும் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருக்கின்றன.

இப்போது இருக்கின்ற கட்டுமானம் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் பழமையானவை என்ற தகவல் கிடைக்கின்றது. தாய்லாந்து அதாவது சயாமிய பௌத்த அடிப்படையில் அமைந்த கோயில் இது. கெடா மாநிலத்தின் சிக் பகுதியில் வசிக்கின்ற மக்களும் குறிப்பாக சீன, தாய்லாந்து இன மக்களும் பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்ற பக்தர்களும் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள்.

இந்த பௌத்த விகாரை முகவரி:
Wat Kalai
Mk Jenari, Jeniang, Gurun, Kedah


வாட் சாரோக் பாடாங் - Wat Charok Padang (Glass bottle temple):


வாட் சாரோக் பாடாங் எனப் பெயர் கொண்ட இந்த பௌத்த விகாரை கண்ணாடி பாட்டில் விகாரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பௌத்த விகாரை தாய்லாந்து பௌத்த கட்டுமானக் கலை அமைப்புடன் அமைந்தது. இது கெடா மாநிலத்தின் சிக் பகுதியில் அமைந்திருக்கின்றது.  அடர்ந்த காடுகள் கொண்ட பகுதியில் நேர்த்தியாக அமைந்திருக்கும் கிராமத்துச் சாலையிலிருந்து சற்று காட்டுப்பகுதிக்குள் செல்லும் வழியில் இந்த பௌத்த விகாரை அமைந்திருக்கின்றது.


இதன்   சிறப்பு வியக்கத்தக்க வகையில் ஒன்றுள்ளது. அதாவது, இங்குள்ள ஒரு விகாரையின் கூரைப் பகுதி ஒரு லட்சம் (100,000) பச்சை மற்றும் பழுப்பு நிறக் கண்ணாடி பாட்டில்களால் உருவாக்கப்பட்ட கூரை அமைப்புடன் அமைந்துள்ளது. (இதனை மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்) தாய்லாந்திலும் இதேபோல கண்ணாடி பாட்டில்களில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தச் சிறிய கண்ணாடி பாட்டில் கூரை அமைப்பு கொண்ட விகாரை மட்டுமன்றி விரிவான பெரிய 2 மாடிக் கட்டிடம் ஒன்றும் அதோடு சிறிய சிறிய வழிபாட்டுப் பகுதிகளும், போதிசத்துவர் சிலையும், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் உருவச் சிலைகளும் இந்த பௌத்த விகாரை உள்ள வளாகத்திற்குள் அமைந்துள்ளன.  இந்த ஆலயத்திற்கு உள்ளே மிகப் பழமையான  உடைந்த படகு ஒன்றும் பாதுகாக்கப்படுகின்றது. அதன் சிறப்பு என்ன என்ற தகவல் தெரியவில்லை.

இந்த வளாகத்திற்குள் சீன நாட்காட்டியில் இடம்பெறுகின்ற 12 விலங்குகளின் சிறிய உருவங்களும் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள குளத்தில் ஆமைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன.

இந்த பௌத்த விகாரை அமைந்திருக்கும் பகுதியின் முகவரி:
Kampung Charok Padang, 08200 Sik, Kedah


தம்ம ஸ்ரீ வரராம் பௌத்த விகாரை - Wat Thammasirivararam (Wat Kura/wat Ruesee Kura):


இது கெடா மாநிலத்தின் சிக் வட்டாரத்தில் அமைந்திருக்கும் மேலும் ஒரு பவுத்த விகாரையாகும்.  முதலில் பார்த்த இரண்டு பவுத்த விகாரைகளிலிருந்து மாறுபட்ட வகையில் இந்த பௌத்த விகாரை அமைந்துள்ளது. ஆமையின் வடிவம் கோயிலின் எல்லாப் பகுதிகளிலும் ஆக்கிரமித்திருக்கிறது. விகாரையின் உள்ளே செல்லும்போது வாசலில் இரண்டு பெரிய ஆமை உருவங்கள் நிற்கின்றன.  உள்ளே நுழைந்தால் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆமை உருவங்கள் பொன் வண்ணத்தால் வர்ணம் பூசப்பட்ட வகையில் காட்சி அளிக்கின்றன.

இந்த பௌத்த விகாரை கடந்த 200 ஆண்டு  காலகட்டங்களில் கட்டப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். ஆயினும் இந்தப் பகுதியில் பழைய கட்டுமானங்களில் சிதிலமடைந்த பகுதிகள் பின்புறத்தில் இன்றும் காணப்படுகின்றன. பௌத்த விகாரையில் புத்தரின் சிலை என்பதைவிட ஓர் அவலோகிதரின் பொன் வண்ணச் சிலை பிரமாண்டமான வகையில் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய பௌத்த விகாரைகளில் தென்படும் சிறிய சிறிய பௌத்த விகாரைகள் இந்தக் கோவில் வளாகத்திலும் அமைந்திருக்கிறது. ஒரு சிறிய அறைக்குள் இளம் வயது புத்தர் நடப்பது போன்ற அழகிய பளிங்கு நிறச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.


ஆமைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்திருக்கும் இந்த பௌத்த விகாரை தனித்துவத்துடன் காட்சியளிக்கிறது. இந்த விகாரை அமைந்திருக்கும் ஒரு பகுதியும் மலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது.  முற்காலத்தில் மலைகள் நிறைந்த இப்பகுதியில் தியானம் செய்வதற்காகவும் பௌத்த நெறிகளைக் கற்பதற்காகவும் பௌத்தர்கள் வந்து தங்கிச் சென்ற இடமாக இது அமைந்திருக்கலாம். இதனை வெளிப்படுத்தும் வகையில் பெரிய கல்லூரி போன்ற ஒரு கட்டடம் ஒன்றும் இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.

இந்த பௌத்த விகாரையின் முகவரி:
Kura
08210, Jeniang Kedah


வாட் புக்கிட் பேராக் பவுத்த விகாரை  ( Wat Bukit Perak / Samnak Ratchakhiri) :



இப்பகுதியில் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு பக்கமும் ரப்பர் தோட்டங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம்,  இது மலைப்பாங்கான ஒரு பகுதிதான். சாலையை ஒட்டியவாறு 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த பௌத்த விகாரை என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.



தாய்லாந்து வகை பவுத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த பௌத்த விகாரை. இங்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் தாய்லாந்து மட்டுமன்றி குறிப்பாகக் கெடா மற்றும் பினாங்கு மாநிலத்தில் வசிக்கின்ற சீன மக்கள் என்று அங்கு பேசிய போது அறிந்து கொண்டேன்.  வளாகம் அமைந்திருப்பது காட்டுப் பகுதி என்றாலும் சீர்படுத்தி தோட்டங்கள் உருவாக்கி அதற்குள் ஆங்காங்கே சிறிய சிறிய சன்னதி போல பௌத்த விகாரைகளை அமைத்திருக்கின்றார்கள்.


சாய்ந்து உறங்கும் நிலையில் அமைந்த புத்தரின் சிலை மற்றும் ஒரு சிறிய கோயிலில் தாரா தேவியின் சீன வடிவச் சிற்பம், ஆங்காங்கே புத்தரின் சிற்பம் மற்றும் நின்ற நிலையில் அமைந்திருக்கும் சிற்பங்கள் இங்கு அமைத்திருக்கின்றார்கள்.  உள்ளே பொதுமக்கள் வந்து வழிபடும் வகையில் அமர்ந்து தியானம் செய்யும் வகையிலும் தியான மண்டபமும் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

பௌத்த பிக்குகள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. ஏனைய பௌத்த விகாரைகளில் இருப்பது போல யானை, புலி போன்ற வடிவங்களுடன் குரங்கின் சிற்பமும் இங்கே புத்தர் சிலைகளோடு இணைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பௌத்த விகாரையின் முகவரி:
K556, Kampung Gajah Putih, 08210 Sik, Kedah, Malaysia


வாட் விசுத்திப்ரதராம் (Wat Visuthipradittharam) பௌத்த விகாரை:



இந்த பௌத்த விகாரையின் வரலாற்றைப் பற்றி இணையத்திலும் கோவில் வளாகத்திலும் தேடிப்பார்த்தேன். ஆனால் தகவல்கள் கிட்டவில்லை. ஓர் ஆய்வுக் கட்டுரை மட்டும் கெடா மாநில பௌத்த விகாரைகளின் பட்டியலில் இந்த விகாரையின் பெயரையும் இணைத்து வழங்கியிருக்கிறது. மேலும் ஒரு கட்டுரை இந்த பௌத்த விகாரை கெடாவில் இருக்கும் அனைத்துப் பௌத்த விகாரைகளிலும் மிகப்பெரியது என்று குறிப்பிடுகிறது. விகாரையின் வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளி மிகப்பெரிய வடிவில் அமைக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். 

ஆனால் இந்த விகாரை அமைந்திருக்கும் நிலப்பகுதியின் சுற்றளவு  நான் நேரில் சென்று பார்த்த ஏனைய விகாரைகளுடன் ஒப்பிடும்போது பள்ளி  அமைந்திருக்கும் நிலப்பகுதி அவ்வளவு பெரிதாக இல்லை என்றே எனக்குத் தோன்றியது.


கோயிலின் அமைப்பு தாய்லாந்து பவுத்த விகாரை கட்டுமான பாணியில் அமைந்துள்ளது. பௌத்த பள்ளியின் சன்னிதிகள், மைய விகாரையைச் சுற்றி ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பௌத்த விகாரையில் தினமும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன என்பதற்குச் சான்றாக ஆங்காங்கே பவுத்த பிக்குகள் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நான் சென்றிருந்த நேரம் நன்பகல் 12:00 மணி என்பதால் பௌத்த பிக்குகள் மதிய உணவிற்காக அவர்கள் இருப்பிடம் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு பௌத்த பிக்கு நான் கோயில் பகுதிக்குச் செல்லும் பொழுது எனக்கு கோயிலின் கதவைத் திறந்து விட்டு மலாய் மொழியில் உள்ளே சென்று என்னை வழிபடச்  சொல்லிவிட்டு அவர் தங்குமிடம் சென்றுவிட்டார்.

இந்தப் பௌத்த விகாரையில் மிகப் பெரிய வடிவிலான நாக வடிவம் வாயில் பகுதியில் இரண்டு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று தலைகள் மற்றும் ஏழு தலைகள் கொண்ட நாகத்தின் வடிவம் அங்கே வைக்கப்பட்டுள்ளன. இதே வகை உருவ அமைப்பில் புத்தரின் தலைப் பகுதியைச் சுற்றி பாதுகாக்கும் வகையில் ஏழு தலை நாகம் இருக்கும் சிற்பங்களை மலேசியா, தாய்லாந்து பகுதிகளில் நான் பல பௌத்த விகாரைகளில் பார்த்திருக்கின்றேன்.


புத்தர் தனது அரசைத் துறந்து ஞானம் பெற பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற போது அவருக்கு ஆதரவு அளித்தவர்கள் நாகர்கள் என்ற கருத்து உண்டு. நாகர்கள் இனம் பண்டைய இந்தியாவின் பூர்வ குடி இனம் என்பது மட்டுமன்றி இலங்கையின் பூர்வ குடி இனம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளலாம். அதில் குறிப்பாக ஏழு தலை நாகம் எனும் உருவ அமைப்பு நாகர்களில் ஏழு வகை குழுக்கள் புத்தருக்கு ஆதரவு வழங்கி இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வாய்ப்பளிக்கிறது. நாகர்கள் இனத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஏழு தலை நாகம் என்ற உருவகம் நாளடைவில் புத்தர் சிலைகளில் இணைக்கப்பட்ட வகையில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த உருவ அமைப்பை மானுடவியல் பார்வையில் வரலாற்றுக் கோணத்தில் ஆய்வு செய்வது தேவையாகின்றது.

இந்தப் பௌத்த விகாரையின் நுழைவாயில், சன்னதிகள், மையக் கோயில் என அனைத்துமே பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கெடா மாநிலத்தின் இன்றும் வழிபாட்டில் இருக்கக்கூடிய முக்கிய பௌத்த விகாரையின் பட்டியலில் இந்தக் கோயிலும் இடம் பெறுகின்றது.


இந்த பௌத்த விகாரையின் முகவரி:
Wat Visuthipradittharam
Kg.Titi Akar Mk.Padang, Kerbau Jln Sg. Tiang Pendang, Kedah


வாட் சுக்தோர்ப்ரன்சாராம் பௌத்த விகாரை (Wat Sukthornprakcharam): 



பௌத்த விகாரை மற்றும் பள்ளி அமைந்திருக்கும் வளாகம். இது ஒரு கலைப் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் நேர்த்தியாகக் கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.  மலாய் மொழியில் Selamat Datang, அதாவது நல்வரவு என்று எழுதப்பட்டு அதன் கீழ் பௌத்த விகாரையின் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளே நுழைந்து வளாகத்தின் உள்ளே செல்லும்போது முதலில் நமக்குத் தென்படுவது ஏழு கிழமைகளுக்கும் ஏழுவகை புத்தரின் சிற்பங்கள். திங்கள் தொடங்கி ஞாயிறு வரை என ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்டு அதற்கேற்ற வகையில் ஓர் உருவத்தை அமைத்திருக்கின்றார்கள்.  ஒரு குன்றின் மேல் அமைந்தது போல இந்தக் கோவில் வளாகம் இருக்கின்றது. படிகளில் ஏறிச் சென்றால் வலது புறமும் இடது புறமும் எனச் சிறிய சிறிய சன்னிதிகள் உள்ளன.  ஒரு பகுதியில் 4 தலைகளுடன் பிரம்மாவின் உருவம் அமைக்கப்பட்ட சிற்பம் உள்ளது. மற்றும் ஒரு சன்னிதியில் போதிசத்துவருக்கான உருவச்சிலை அமைந்திருக்கின்றது. ஏனைய சன்னிதிகளில் புத்தரின் பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கடந்து குன்றின் உச்சிப் பகுதிக்குச் சென்றால் அங்கே சாய்ந்த நிலையில் சயன புத்தரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்றதொரு உருவச்சிலை, ஆனால் மிகப் பிரம்மாண்டமான வகையில் பினாங்கு மாநிலத்தில் இருக்கின்றது.


இந்தப் பகுதியிலிருந்து இறங்கி இடது புறமாக மேலும் நடந்தால் அங்குப் பூங்கா மேலும் விரிவாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.  முதலில் வருவது மிக அழகிய வடிவில் அமைக்கப்பட்ட ஒரு சன்னிதி. இதில் புத்தர் தனது சீடர்களுக்கு ஞானம் வழங்குவது போலும், கீழே தரையில் சீடர்கள் அமர்ந்திருப்பது போலும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதிக்கு வரும் அனைவரையும் இங்கே  அமர்ந்திருந்து தியானம் செய்யும் வகையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கடந்து வரும்போது ஆங்காங்கே விலங்குகளின் சிற்பங்கள் தென்படுகின்றன. அதற்கடுத்து கீழே வரும்போது அழகான ஒரு குளத்தின் நடுவே தாராதேவி நின்ற நிலையில் அருள்பாலிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே வரும்போது புத்தரின் அன்னை மற்றும் அவரது தோழியர் சூழ நிற்கும் சிற்ப வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் வடிவங்கள் சேலை அணிந்த வகையில் இந்தச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறுதியாக நாம் காண்பது ஒரு சிற்பம். இது குதிரை ஒன்று பின்புறத்தில் நிற்க புத்தர் தனது தலைமுடியை இழுத்து கத்தியால்  வெட்டுவது போல ஒரு காட்சி.


இவற்றையெல்லாம் கடந்து வந்தால் பவுத்த பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்கு வரலாம். இப்பகுதி வழிபாடுகளும், தியான நிகழ்ச்சிகளும் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பௌத்த விகாரைக்கு வாசல் புறத்தில் வழங்கப்பட்டுள்ள பெயரைக் குறிப்பிட்டு நான் இணையத்தில் தகவல் தேடியபோது எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த பௌத்த விகாரை மட்டுமல்ல... மேலும் சில பௌத்த விகாரைகளின் தகவல்களும் இணையத்தில் கிடைக்கும் வகையில் இல்லை. நேரடியாகச் சென்று அவற்றைக் காணும் போதுதான் இத்தனை பௌத்த விகாரைகள்  இந்தப் பகுதியில் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்த பௌத்த விகாரையின் முகவரி:
Kg. Tong Prok, Mk, 06750 Pendang, Kedah, Malaysia.


முடிவுரை



வரலாற்றில் ஆர்வம் கொண்ட நம்மில் பலருக்குக் கிழக்காசியா மற்றும் தூரக் கிழக்காசிய நாடுகளின் வரலாற்றை அறிந்து கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. தமிழ்நாட்டின் வரலாறு என்பது தமிழ்நாட்டிற்குள் மட்டுமே அடங்கவில்லை. உலகளாவிய அளவில், அதிலும் குறிப்பாக, கிழக்காசிய நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு இருந்த, இருக்கின்ற தொடர்புகள் என்பவை மிக முக்கியமானவை.  மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள பௌத்த விகாரைகளைப் பற்றி புகைப்படங்களுடன் பகிர்ந்திருந்தேன். இணையத்தில் மேலும் தேடியபோது கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்துக்கும் உள்ள தொடர்பு பற்றிய மேலும் சில செய்திகள் கிட்டின.

மலேசியாவின் கெடா மாநிலத்தில் இன்றைய கணக்குப்படி ஏறக்குறைய 37 பௌத்த விகாரைகள் இருக்கின்றன. கெடா மாநிலம் மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்று என்பதோடு பண்டைய ஸ்ரீவிஜயப் பேரரசு அதன் தலைநகராகக் கடாரத்தைக் கொண்டிருந்த ஒரு நிலப்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதி மிக முக்கியம் வாய்ந்த துறைமுகப் பகுதியாகவும் பண்டைய காலத்தில் இருந்தது.

இந்தியாவிலிருந்து, குறிப்பாக காஞ்சிபுரம், நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கடல் வழிப் பயணம் செய்து கிழக்காசிய நாடுகளுக்கு வந்த பௌத்த பிக்குகளும், பௌத்தத்தைத் தழுவிய வணிகர்களும் இப்பகுதிகளில் பௌத்தம் மிக ஆழமாக வேரூன்றி வளர அடிப்படையை உருவாக்கியிருந்தனர்.

காலப்போக்கில் அரசியல், சமய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இன்று இப்பகுதியில் வாழும் தமிழர்களை விட சீனர்களும், தாய்லாந்து சயாமிய மக்களும் இப்பகுதியில் பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களாக அமைகின்றனர்.

இன்று கெடா மாநிலம் மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றாக அரசியலமைப்புச் சட்டத்தின் படி அமைந்துள்ளது. ஆயினும் வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்கும்போது தாய்லாந்து, அதாவது பண்டைய சயாம் நாட்டுடன் நீண்ட தொடர்பு கொண்ட நிலப்பகுதியாக அமைந்தது என்று கூற வேண்டும்.  இப்பகுதியில் ஆட்சி அமைத்திருந்த பண்டைய பேரரசனான பூஃனான், ஸ்ரீ விஜயா போன்ற பேரரசுகள் பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகள் ஆகும். இவற்றின் காலம் கிபி 11 வரை எனக் கூறலாம். இதன் பின்னர் ராஜேந்திர சோழனின் படை எடுப்பு இப்பகுதியில் நிகழ்ந்த பின்னர் மலாய் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தனர்.

அரேபிய இஸ்லாமிய வணிகர்களின் வருகை இப்பகுதியில் படிப்படியாக இஸ்லாமிய மதம் பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக கி.பி. 15ஆம் நூற்றாண்டு வாக்கில் இப்பகுதி தொடக்கம், மலாக்கா, தீபகற்ப மலேசியா ஆகிய பகுதிகள் முழுமையாக இஸ்லாமிய மதத்தைத் தழுவிய வகையில் இஸ்லாமிய நாடாக சமய அடிப்படையில் மாற்றம் பெற்றது.  இத்தகைய சமய பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்த போதிலும் கூட கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்திற்கும் உள்ள தொடர்பு என்பது இன்றும் தொடர்கின்றது. கெடா மாநிலத்தின் ஒரு பகுதி தாய்லாந்தில் எல்லையாகவும் அமைகிறது.

1909ஆம் ஆண்டு Anglo-Siam Treaty என்ற ஒப்பந்தத்தின்  அடிப்படையில் இன்று நாம் காண்கின்ற பிரித்தானிய மலாயாவிற்கும் தாய்லாந்து நாட்டிற்குமான எல்லை பிரிவு ஏற்படுத்தப்பட்டது. Satun பகுதி மலையாவிற்கும், Patani பகுதி சயாம் நாட்டிற்கும் எனப் பிரிக்கப்பட்டன. எல்லைப் பகுதியில் வாழ்ந்த சயாமிய மக்கள் தனித்துவத்துடன் கூடிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டவர்களாகத் தொடர்கின்றனர்.

இன்றும் கூட தாய்மொழியை(தாய்லாந்து மொழி) இப்பகுதி மக்கள் ஓரளவிற்கு இயல்பாகப் பேசுகின்றனர். தாய் மொழியைப் பேசுகின்ற இம்மக்களை சாம்சாம்ஸ் (The Samsams) என்று அழைக்கின்றனர். இவர்களில் சிலர் இஸ்லாமியர்களாகவும் பெரும்பான்மையோர் பௌத்தத்தைத்  தொடர்ந்து சமயமாகக் கொண்டிருப்பவர்களாகவும், அதிலும் குறிப்பாக,  தேரவாத பௌத்தத்தைத் தொடர்பவர்களாகவும் அமைகின்றனர். இந்த சாம்சாம்ஸ் இனத்தவர்கள் பற்றிய எண்ணிக்கை தகவல்கள் 1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The Siamese in Kedah under nation state making (Keiko Kuruda, Kagoshima University) என்ற கட்டுரை 1892 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அன்றைய கெடா மாநில சுல்தானாக இருந்த சுல்தான் அப்துல் ஹமீத் அவர்களது கடிதங்களின் வழி பென்டாங் பகுதியில் 13 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும் அதில் வாட் லம்டின் விகாரையில் மட்டும் 22 பௌத்த பிக்குகள் பதிவு செய்திருந்தார்கள் என்ற தகவலையும் வழங்குகிறது.  இதே கட்டுரை 1974-ஆம் ஆண்டு அறிக்கையின்படி கெடா மாநிலத்தில் மட்டுமே 26 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும் 27 கிராமங்கள் இருந்ததாகவும், அதில் ஏறக்குறைய 3500 குடும்பத்தினர் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.

கெடா மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பவுத்த விகாரைகள் இன்று புதிய கட்டிடங்களில் அழகுறத் திகழ்கின்றன. ஆனால் இவை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பௌத்த விகாரைகள் இவை. பண்டைய பேரரசுகளின் அரச சமயமாக பௌத்தம் இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட விகாரைகளின் எச்சத்தின் தொடர்ச்சி. பழைய கட்டுமானப் பகுதி சிதிலம் அடையும்போது புதிய கட்டுமானங்களை உருவாக்கி வழிபாட்டையும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பாதுகாத்து வருகின்றனர் இப்பகுதி மக்கள்.

கெடா மாநிலத்து சயாம் பௌத்த பின்னணி கொண்ட மக்கள் பினாங்கு மாநிலத்தில் உள்ள பௌத்த சங்கத்திலும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். முக்கிய ஆண்டு விழாக்கள், பண்டிகைகள் நிகழும்போது பினாங்கிலிருந்து பெருவாரியாக மக்கள் வழிபாட்டிற்கு வருகிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது.

பௌத்தம் கி.பி. 1, 2 ஆகிய காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக காஞ்சிபுரம், நாகப்பட்டினம் பகுதியில் இருந்தும் கடல்வழி பயணித்த வணிகர்கள் மற்றும் பௌத்த பிக்குகளின் முயற்சிகளினால் கிழக்காசியா மற்றும் தூரக் கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியது. புதிதாகப் பரவிய நிலத்தில் அவை மேலும் அந்தந்த நிலத்திற்கு ஏற்ற பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக்கொண்டு வழிபாடுகளில் மேலும் சில புதுமைகளைப் புகுத்திக் கொண்ட வகையில் மாற்றம் கண்டன. மாற்றங்கள் உட்புகுந்தன என்றாலும்கூட பழமையான  பௌத்தப் பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு வழிவழியாக வழிபாடு செய்யப்பட்ட பகுதிகளில் வழிபாடுகள் தொடர்வதைக் கிழக்காசிய நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் காணமுடிகிறது.

மலாயா மலேசியாவாக மாறிய பின்னரும் கூட அரச சமயமாக இஸ்லாமிய சமயம் முக்கியத்துவம் பெற்ற பின்னரும் கூட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பௌத்த விகாரைகள் நிறைந்திருக்கின்றன என்பது புலப்படுகிறது. பௌத்த விகாரைகள் சீனர்களுக்கும் தாய்லாந்து மக்களுக்கும் உரிய வழிபாட்டுத்தலங்கள் தானே என ஒதுக்கி விடாமல் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டின் தொடர்ச்சி என்ற ரீதியில் இவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்து அவற்றின் வரலாற்றுப் பின்னணிகளைத் தேடவேண்டிய அவசியம் இருக்கிறது. இத்தகைய தேடுதல்கள் நமக்கு மேலும் சில புதிய தரவுகளை வழங்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

முற்றும்

Monday, October 22, 2018

பினாங்கு - மண்ணின் மணம்

டுரியான் வாசனை, செண்டோல் குளிர்பானம், அலங்கரித்த ரிக்‌ஷா வண்டி, பினாங்குக்குக் குஜராத்திலிருந்து வந்த சௌராஸ்டிர வணிக மக்களின் தடயங்களை நினைவு கூறும் சௌராஸ்டிரா மார்க்கெட் கடைகள், பினாங்கு சார் கொய் தியாவ் ...
இந்த நினைவுகளோடு பினாங்கிலிருந்து சென்னைக்கு புறப்படுகின்றேன். அடுத்த சில தினங்கள் சென்னையில்..









Sunday, October 21, 2018

உரை

பினாங்கு இந்து அறப்பணித்துறையின் ஏற்பாட்டில் நேற்று கொம்தார் ஆடிட்டோரியம் C அரங்கில் நடைபெற்ற எனது உரையின் சில காட்சிகள்.








பத்திரிக்கையில் செய்தி

நேற்றைய மலேசிய பத்திரிக்கையில் செய்தி..


என் பள்ளிக்கூடம்

பினாங்கில் நான் படித்த ஆரம்பப்பள்ளி வளாகத்திற்கு இன்று காலை சென்றிருந்தேன். கான்வ்வெண்ட் தமிழ்ப்பள்ளி - எனது தொடக்ககால கல்வி இங்கு அமைந்தது. கத்தோலிக்க தேவாலயத்திற்குச் சொந்தமான வளாகத்தில் அரசு உதவிபெற்ற ஒரு பள்ளியாக இது இயங்கி வந்தது. அன்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக திருமதி அன்னமேரி லூயிஸ் அவர்கள் இருந்தார்கள். எனது ஆசிரியராக திருமதி. வேலு நினைவில் இருக்கின்றார்.
பள்ளிக்கூடத்திற்கு பஸ் செக்கோலா அதாவது பள்ளிப்பேருந்து ஏறி வருவோம். வாகன ஓட்டி ஒரு தமிழர். சில நாட்களில் அவரும், சில நாட்களில் அவரது மனைவியும் இப்பேருந்தை ஓட்டுவர். பல நேரங்களில் முன் இருக்கையில் அமர்ந்து கொள்வேன்.
அவர்கள் வாகனத்தில் கேசட் ப்ளேயர் இருக்கும். தினமும் செந்தமிழ் தேமொழியாள்.. நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் என்ற பாடலும் காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி என்ற பாடலும் தவறாமல் ஒலிக்கும். அந்தக் காலத்தில் இந்தப்பாடல்கள் மனப்பாடமாகியிருந்தன எனக்கு.
பள்ளிக்கூடத்தின் வாசலில் ஒரு சிறியக் பெட்டிக்கடை இருக்கும். அதில் தான் சாக்லெட், பலகாரங்கள் என வாங்கி சாப்பிடுவோம். அந்தப் பெட்டிக்கடை இன்றும் இருக்கின்றது. பள்ளிப்பேருந்துக்காக மதியம் வெளியே காத்திருப்போம். சாலையில் ஐரோப்பிய சுற்றுப்பயணிகள் நடந்து செல்வார்கள். அவர்களைப் பார்த்து கையசைப்பது எங்கள் வாடிக்கையாக இருந்தது. இன்று ஐரோப்பாவில் வாழ்வதை நினைத்ததில் மனதில் சிரிப்பு தோன்றி முகத்திலும் வெளிபட்டது.
வாரத்தில் ஒருநாள் தேவாலயத்திற்கு அனைவரும் செல்வோம். வரிசையாக நின்று புனித அப்பம் பெற்றுக் கொண்டு பின்னர் பள்ளிக்கு வருவோம்.
பள்ளிக்கூடத்தில் 3ம் ஆண்டில் இருக்கும் போது தோட்டம் போடும் பயிற்சி கிடைத்தது. பருத்தி செடி போட்டிருந்தோம். பருத்தி பஞ்சை எடுத்துப் பிரித்து சேகரித்து பருத்தி பற்றி அறிந்து கொண்டது பசுமையாக நினைவில் இருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் படித்ததை விட விளையாடிய பொழுதுகள் தான் நினைவில் அதிகம் பதிந்திருக்கின்றன. என்னுடன் விளையாடிய சரஸ்வதி, இன்பம், நாசீர், வீரபத்திரன், மீனாட்சி, சீதா, செல்லம்மாள் ஆகியோர் குழந்தைப்பருவ முகங்கள் மட்டும் மனதில் நிலைத்திருக்கின்றன.

பள்ளிக்கூடம் இருந்த பகுதியில் இன்று பள்ளிக்கூடம் இல்லை. ஏழை எளியோருக்கான இலவச உணவகம் ஒன்றினை தேவாலய அமைப்பு இங்கு செயல்படுத்தி வருகின்றது. ஒரு அனாதைக்குழந்தைகள் இல்லமும் இன்று இங்கு செயல்பட்டு வருகின்றது. தேவாலயம் பூட்டி இருந்தது.

பாதிரியார் வீட்டின் முன்னே வாசலில் பத்திரிகைகள் வாசித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். நான் அருகில் வரும் போது விபரம் கேட்டார். என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டேன். அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பலகாரங்களும் தேனீரும் வழங்கினார். அவர் ஒரு தமிழர். தமிழிலேயே பேசினார்.

நான் எந்த மதத்தைச் சார்ந்தவர் எனக் கேட்டார். நான் மதங்களை பின்பற்றுவதில்லை. ஆனால் பிறரது மத நம்பிக்கையைக் குறைத்து மதிப்பிடுவதுமில்லை எனச் சொன்னேன். ”அப்படியே இரு. இந்த சிந்தனை உள்ளவர்களுக்கு மதம் தேவையே இல்லை” எனச் சொல்லி சிரித்தார்.

நனவிடைத்தோய்தலில் மகிழ்ந்திருந்து என் பள்ளி நினைவுகளைச் சுமந்தபடி வளாகத்திலிருந்து வெளியே வந்தேன்.







-சுபா

பேரா.முனைவர் ராமசாமி

பினாங்கு மாநில துணை முதல்வர் பேரா.முனைவர் ராமசாமி அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். மலேசியத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய நீண்ட கால ஆய்வில் ஈடுபட்டவர். இவரது மலேசியத் தோட்டத் தொழிலாளர் வாழ்வும் போராட்டங்களும் என்ற நூலை நேற்று எனக்குப் பரிசளித்தார்.
மலேசிய தோட்டப்புர மக்களின் வாழ்வியல் துன்பங்களை ஆழமாகப் பதிவு செய்திருக்கும் நூல் இது.
இவரது ஆய்வில் பிரசித்தி பெற்றது செலாஞ்சார் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக இருந்து வந்தமையை கண்டுபிடித்து அதனை வெளிச்சப்படுத்தியது. இதுவே இவரது அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் அமைத்தது. கொத்தடிமைகளாக ஒரு தோட்டத்தில் மக்கள் வாழ்ந்து வந்த கொடுமையை 1980களில் வெளிப்படுத்தி அம்மக்களை மீட்கும் முயற்சியை இவர் தொடக்கியது அன்று மாணவப் பருவத்தில் இருந்த எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது.
படித்த, சமூக நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கொண்டிருப்பதால் பினாங்கு மாநிலம் இன்று ஆக்கப்பூர்வமான வளர்ச்சி கண்டு வருகிறது!


-சுபா

உரை நிகழ்வு - அழைப்பிதழ்

இன்று மதியம் பினாங்கு கொம்தார் மண்டபத்தில் எனது உரை நிகழ்வு நடைபெறுகிறது.